"படம் சொதப்பல், ஒண்ணுமே புரியல, வரலாறு அரசியல் தொன்மம் எல்லாம் தனித்தனியா நிக்குது. நல்லாவே இல்ல. விக்ரம் உசுர கொடுத்து நடிச்சி இருக்காப்ல ஆனால் எல்லாம் வேஸ்ட்டு. ரஞ்சித் படங்களிலேயே இது ரொம்ப மோசம். வாங்குன டிக்கெட் எல்லாம் ரிட்டன் ஆகுதாம்"
இத்தனைக்கும் மத்தியில் தான் தங்கலானுக்கு டிக்கெட் எடுத்தேன்.
படம் குறித்து தோழர் Rajasangeethan Geetha Narayanan எழுதியவற்றுடன் உடன்படுவதோடு Random thoughts சிலவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன்.
வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் பணியாற்றிய அனுபவமோ என்னவோ வசனங்களைப் புரிந்துகொள்வதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை. மிகுந்த ஆச்சர்யம் என்னவெனில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகிற வட ஆற்காடு தலித் வட்டார வழக்கிலும் தென் தமிழகத்தின் தேனி மதுரை திண்டுக்கல் போன்ற பகுதிகளில் வசிக்கும் தலித்துக்களின் வட்டார வழக்கிலும் சில சொற்களில் காணப்படுகிற ஒற்றுமைகள்.
அவற்றிலொன்று
'வேணாம்' என்பதை 'மாணாம்!' என்பது. (பாமா அக்காவின் கருக்கு நாவலிலும் சிறுகதைத் தொகுப்பிலும் இத்தகைய ஒற்றுமைகள் இருந்தன). தலித் வட்டார வழக்குகள் ஆய்வுக்குரியவை.
வாக்குச் சொல்வது, குறி சொல்வது, அருள் வந்து ஆடுவது, நடுகல் வழிபாடு உள்ளிட்ட தொல்குடி நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் படத்தில் உள்ளன. இவையெல்லாம் திரைப்படத்தை மனதுக்கு நெருக்கமாக்கின. காரணகளும் உண்டு.
சோழர் காலத்தில் கொய்யப்பட்ட புத்தரின் தலையை, அசோகன் எடுத்து வந்து உடலோடு சேர்த்து வைக்கும் நிகழ்வு அரச மரத்து பிள்ளையாரின் தலை மாற்றப்பட்ட புனைவின் மறுகட்டமைப்பு
தங்கலானைக் கனவிலும் நனவிலும் ஆரத்தி ஆட்டிவைக்கும் காட்சிகள், காடையனின் சன்னத நினைவில் தங்கலான் வாக்கு (கவிதை) சொல்லும் காட்சியின் அமானுஷ்ய அதிர்வுகள் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.
தனது தொல் நிலத்தை செங்கோலுக்குக் காட்டிக்கொடுத்த காடையனையும், காலனியர்களுக்குக் காட்டிக்கொடுத்து தன் மக்களையும் துன்புறுத்திய தங்கலானையும் விட நிலத்துக்காகத் தொடர்ந்து போராடுகிற, ரத்தம் சிந்துகிற ஆதித் தாய் ஆரத்தி உயர்ந்தவள். இராம கதையில் அரக்கியாகச் சித்தரிக்கப்பட்டு கொல்லப்பட்ட வனத் தலைவி தாடகையை நினைவு படுத்துகிற பாத்திரம். கதையின் முதன்மைப் பாத்திரம் ஆரத்தி எனும் ஆதித்தாய் தான். அப்புறம்தான் தங்கலான்.
மாளவிகா மோகனன், பார்வதி, விக்ரம், பசுபதி, டேனியல், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் அன்புடன், ப்ரீத்தி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் அட்டகாசம்.
விக்ரம் சும்மாவே ஆடுவாப்ல. முழங்கால் வரை சலங்கை கட்டிவிட்டால் கேட்கவே வேண்டாம். மனுஷன் ஜங்குஜங்குன்னு ஆடிருக்காப்ல.
ரவிக்கைக்குள் முதன்முதலாகக் கை நுழைக்கும்போது பார்வதி முகத்தில் தாண்டவமாடுகிற வெட்கத்துக்கும் சிரிப்புக்கும் மட்டுமே தனியாக விருதுகள் தரலாம்.
பெரும்பாலான காட்சிகள் மொட்டை வெயிலில் எடுக்கப்பட்டவை. எப்படித்தான் நடித்தார்களோ என்ற பதைபதைப்பு காட்சிகள் நெடுகிலும்.
படத்தின் தலைப்பிலிருந்து படம் நெடுகிலும் வியாபித்திருக்கிறது தங்கம். படத்தில் 'தங்கம் ஒரு மஞ்சள் பேய்' என்ற வசனம் இருக்கிறது.
செத்துக்கிடக்கிற கணவனைக் காட்டிலும் தங்கக் கட்டி பெரிதென்று எடுத்துக் கொண்டு ஓடவைக்கிறது அந்தப் பேய். மக்களுக்காகக் கொஞ்சம் தங்கத்தைக் கொடு என்கிறான் தங்கலான். பற்றறு என்கிறார் ஆதி முனி.
இறுதி காட்சியில் மக்களின் கைகளுக்கு தங்கம் கிடைக்கும்பொழுது திரண்டு வருகிறது காலனி சிப்பாய்களின் கூட்டம். தங்கம் ஒரு மஞ்சள் பேய்தான்.
படம் பார்க்கும்போதே பி.ஹெச். டேனியலின் எரியும் பனிக்காடு அலெக்ஸ் ஹெலியின் ஏழு தலைமுறைகள் நாவல்களும்
Django Unchained, Rabbit Proof Fence படங்களின் சில காட்சிகளும் நினைவுக்கு வந்தன.
அழகிய பெரியவன், மௌனன் யாத்ரிகா, தமிழ் பிரபா, சுகந்தி, விடுதலை சிகப்பி என டைட்டில் கார்டில் பரிச்சயப்பட்ட பெயர்கள் நிறைய. மகிழ்ச்சி.
இங்கு எல்லோருக்கும் ஒரு அரசியல் உண்டு. அவரவர் அரசியலை அவரவர் பேசியாக வேண்டும். தனக்கான அரசியலை, தனது தொல்குடிகள் நிலமிழந்த அரசியலை, அடிமைப்பட்ட அரசியலை, அடையாளமிழந்த அரசியலை உரத்த குரலில் ,
தனது வலுவான திரைமொழியில் பேசியுள்ளார் பா. ரஞ்சித். சில கேள்விகள், சில குழப்பங்கள் இருந்தாலும் தங்கலான் ஒரு அட்டகாசமான திரை அனுபவம்.