உணர்ந்து சுகித்து இன்புற்றிருக்க ஏதுமில்லாத ஓர் எதிர்மறை உணர்வுதான் அச்சம். மனித குலத்தின் மகத்தானதும் இன்றியமையாததுமான உணர்வும் கூட. இந்த அச்ச உணர்வுதான் மனித குலத்தை பரிணாம வளர்ச்சியின் அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்த்திச் சென்றது. அந்த அச்சமுற்ற மனதுதான் தன்னிச்சையாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு அச்சத்திற்கு எதிர்வினையாற்றத் தலைப்படுகிறது. வரவிருக்கும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் உடலையும் மனதையும் தயார் படுத்துகிறது. விலங்குகளுக்கும் இயற்கைப் பேரிடருக்கும் அச்சமுற்ற மனிதகுலம் தனது பாதுகாப்புக்காகத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்ட முயற்சியே பரிணாம வளர்ச்சி.
மனிதகுலத்தைத் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வரும் பலவற்றில் முதன்மையானது அணுசக்தி. அணுசக்தி என்றாலே அழிவு சக்தி தான் என்று அரை நூற்றாண்டுக்கும் மேலாவும் அச்சத்திலேயே வாழப் பழகிவிட்ட மனித குலத்தின் புரிதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சிதான் அகாடெமி விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் இயக்கிய ஆவணப்படம் ‘நியூக்ளியர் நவ் (2023). இதன் திரைக்கதையை ஆலிவர் ஸ்டோனும் ஜோஷுவா கோல்ட்ஸ்டீனும் இணைந்து எழுதியுள்ளனர்.
முதலில் எரிசக்தி குறித்த ஒரு எளிய அறிமுகம். எரிசக்தியில் மரபு-சார் மற்றும் மரபு-சாரா என இருவகை உண்டு. விறகு, கம்பு, கட்டை, கரி, இலை தழை, புதைபடிவ (நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், எரிவாய்) எரிபொருட்கள் முதலியன மரபுசார்ந்தவை. இவற்றை எரித்தால் கரிந்து சாம்பலாகுபவை. கரியமிலக் கழிவுகளைச் சுற்றுச்சூழலில் கலப்பவை. மாசுபடுத்துபவை. புதுப்பிக்க இயலாதவை. காற்று, நீர் சூரிய சக்தி முதலானவை மரபுசாராதவை. புதுப்பிக்கத்தக்கவை. கழிவுகள் அற்றவை. எரிதிறனில் சிறந்தவை.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு என்பது மனித நாகரிகத்தின் வரலாற்றைப் போலவே பழமையானது. வணிகரீதியாக எண்ணெய் கிணறுகள் தோண்டப்படும் நெடுங்காலத்துக்கு முன்பே மக்கள் நிலக்கரியைப் பயன்படுத்தியதற்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் பலவும் காணக்கிடைக்கின்றன. இன்று வரை இத்தகைய புதைபடிவ மூலங்களே உலகின் முதன்மையான எரிசக்தி மூலங்களாக உள்ளன.
. புதைபடிவ எரிபொருட்களின் அபரிமிதமான பயன்பாட்டினால் சுற்றுசூழல் பெரிதும் மாசடைந்துள்ளது. 2020-ம் ஆண்டு ஆய்வின் நிலவரப்படி உலகில் நிலவுகிற கரியமில வாயு மாசுபாட்டில் 91 சதவிகிதம் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்துவதால் ஏற்பட்டவை. இத்தகைய இடையறாத சுற்றுச்சூழல் மாசுபாடும், அதன் விளைவான காலநிலை மாற்றமும் அதனைத் தொடர்ந்து உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இயற்கைப் பேரழிவுகளும் மனித குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். மிகச் சமீபத்திய உதாரணம் வயநாடு நிலச்சரிவு. இத்தகைய சூழலில் சுற்றுச்சூழலை பாதிக்காத, மாசுபடுத்தாத, மனித குலத்துக்குப் பாதுகாப்பான மரபு-சாரா எரிசக்தி மூலங்களை நோக்கி நகர்ந்து கார்பன் - நீக்கம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம் நாம்.
தொழிற்புரட்சிக்குப் பின்னர், மரபுசாரா எரிசக்தி மூலங்களான காற்று, நீர், சூரிய சக்தி போன்ற ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் எரிசக்தியின் தேவைக்கு ஏற்ப எத்தனை தூரம் தாக்குப் பிடிக்க இயலும் என்பதும் நமது எரிசக்தி தேவைக்கான தொழில்நுட்பங்களில் நம்பிக்கைக்குரியவை எவை என்பதுமான கேள்விகள் எழவே செய்கின்றன. ஆனாலும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு பெரும்பாலான நாடுகள் மரபுசாரா எரிசக்தி மூலங்களை நோக்கி நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றால் உலக மக்களின் எரிசக்தி தேவைகளில் 30 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்ற முடிகிறது. இத்தகைய சூழலில் தான் ’நியூக்ளியர் நவ் (2023)’ எனும் ஆவணப்படத்தில் அவநம்பிக்கைக்கும் அச்ச உணர்வுக்கும் பெரிதும் பாத்திரமாகியுள்ள ’அணுசக்தி’ எனும் சர்ச்சைக்குரிய கருப்பொருளை மரபு-சார் எரிசக்திக்கு ஒரு சிறந்த மாற்றாக பரிந்துரைத்திருக்கிறார் ஆலிவர் ஸ்டோன். முற்றிலும் புதிய கோணம். புதிய வாதம்.
ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா நாகசாகியைத் தாக்கிய அணு ஆயுதப் பேரழிவும் (1945), பென்சில்வேனியத் தீவான த்ரீ மைல் ஐலண்டிலும் (1979) செர்னோபில்லிலும் (1986) ஃபுகுஷிமாவிலும் (2011) நடந்தேறிய விபத்துக்களும் ’அணுசக்தி என்பது ஒரு அபாயகரமான பேரழிவின் மூலம்’ என்ற உலகளாவிய கண்னோட்டத்தையும் நடுக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக 1970-களிலும் 1980-களிலும் அணுசக்திக்கும் அணு ஆயுதத்திற்கும் எதிராக உலகெங்கும் பல மக்கள் இயக்கங்கள் உருவாகிப் போராடியது வரலாறு. இவற்றில் சில இயக்கங்கள், (கச்சா எண்ணெய்க்குப் போட்டியாக அணுசக்தி உருவாகிவிடக்கூடும் என்ற எண்ணத்தில்) எண்ணெய் முதலாளிகளின் நிதியுதவியில் வளர்ந்தவை என்கிறார் ஆலிவர் ஸ்டோன்.
ஆனால் தற்போதைய நவீன அணு உலைகள் போதுமான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை என்றும் கடந்த காலங்களில் நடந்தேறிய அபாயகரமான அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படச் சாத்தியமில்லை என்றும் வாதிடுவதோடு அணு சக்தி குறித்த நமது கண்ணோட்டத்தின் மீதும் நீண்ட நெடுங்காலமாக நம்மிடையே நிலவி வரும் அச்ச உணர்வின் மீதும் ஒரு ஆழ்ந்து ஆராயப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற மறுகட்டமைப்பை நிறுவ முனைந்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் நேர்காணல்களும் வாதங்களும் அணுசக்தியின் நன்மைகள் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்குகிறன்றன. அவை அணுசக்தி குறித்து நாம் உருவாக்கி வைத்துள்ள தவறான புரிதல்களின் மீதும், அவை குறித்து நிலவி வருகிற வலுவான கட்டுக்கதைகளின் மீதும் விரிவான வெளிச்சம் பாய்ச்சுகின்றன.
அணுசக்தியை மரபுசார் புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக முன்வைப்பதோடு மட்டுமல்லாமல் காற்று, நீர், சூரிய சக்தி போன்ற மரபுசாரா எரிசக்தி மூலங்களுக்கும் மாற்றாக முன்வைக்கிறது. அதாவது சூரிய சக்திக்குப் பொருத்தப்படுகிற சோலார் பேனல்களையும் காற்றாலையும் நீர் மின் நிலையங்களையும் அமைப்பதற்குத் தேவைப்படும் இடத்தையும் செலவையும் கணக்கிடுகையில் ஒரு நியூக்ளியார் ரியாக்டரை நிறுவதற்கான இடத் தேவையும் செலவும் மிகக்குறைவு என்கிறது இப்படம். இன்னும் சொல்லப்போனால் அணு உலை விபத்துக்களால் ஏற்படுகிற ஆபத்துக்களை விட புதைபடிவ மாசுபாட்டால் நிகழ்கிற இயற்கைப் பெரழிவுகள் பல மடங்கு ஆபத்தானவை என்கிற தரவுகள் முன்வைக்கப்படுகின்றன.
படத்தில், நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவைப்படுகிற நியூக்ளியர் பேட்டரி முதல் வீட்டு உபயோக மின் தேவைகளுக்குப் பயன்படுகிற பேட்டரிகள் வரை அணுசக்தியின் பயன்பாடுகள் எடுத்துக்காட்டுகளோடு விவரிக்கப்டுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால்
1. அணு சக்திக்கும் அணு ஆயுதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிகொள்வதற்கும்,
2. மரபு சாரா எரிசக்தி துறையில் அணுசக்தியை ஒரு இன்றியமையாத அங்கமாக இருத்திவைப்பதற்கும்,
3. அணுசக்தி என்பது ஒரு அபாய சக்தி’ என்கிற தவறான கண்ணோட்டத்தால் காலநிலை மாற்றத்தின் அபாயங்களைச் சரிசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன
என்பதையும் விளக்குவதற்கான பெரும்பிரயத்தனம் படம் முழுவதும் எதிரொளிக்கிறது. மொத்தத்தில் இத்திரைப்படம் அணுசக்தி குறித்த நமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதோடு அணுசக்தியை ஓர் நிரந்தர எரிசக்தி மூலமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைஅறிவியல்பூர்
ஆலிவர் ஸ்டோனின் அடர்த்தியான குரல் படம் முழுதும் நம்முடனேயே பயணித்து அணுசக்திக்கான வாத எதிர்வாதங்களை எளிய ஆங்கிலத்தில் எடுத்து வைக்கிறது. இடையிடையே வருகிற அனிமேட்டட் தரவு விளக்கங்களும் சுவாரசியமாக உள்ளன. படம் துவங்குகையில் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரியின் வரிகள் திரையில் ஒளிர்கின்றன.
”வாழ்வில் எதற்கும் அச்சமுற வேண்டியதில்லை. அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும்”
அணுசக்தியைக் கண்டு அச்சமுறத் தேவையில்லை. அதனைப் புரிந்துகொள்ளத் தலைப்பட்டால் போதும். அணுசக்தியைப் புரிந்துகொள்வது என்பது இப்பூவுலகின் நன்மை குறித்த மாற்றத்துக்கான அச்சத்தை வென்றெடுப்பது. இதுவே அணுசக்தியின் பொருட்டு ஆலிவர் ஸ்டோன் முன்வைக்கிற அடிப்படைப் புரிதலைக் கோருகிற நிதானமிக்க வாதம். ஆனாலும் வழி தப்பி ஊருக்குள் வந்துவிட்ட கழுதைப்புலிக்கு வாய்க்கூடு போட்டு வீட்டில் வளர்ப்பது போன்ற உணர்வு மேலிடாமல் இக்கட்டுரையை முடிக்க இயலவில்லை.
References
1. Tom Kool (2020) The complete history of Fossil Fuels https://oilprice.com/Energy/
2. Ritchie and Rosado (2024) Nuclear Energy https://ourworldindata.org/
3. Ritchie and Rosado (2024) Renewable Energy https://ourworldindata.org/
No comments:
Post a Comment