பார்வைகள்

Tuesday, April 24, 2012

நீரின்றி அமையும் வீடு


நேற்றிரவிலிருந்து தண்ணீர் வரவில்லை
ஆர்த்தியின் வீட்டில்
காலைக் கடன் கழித்தல் முதல்
அடுப்படியின் அத்தனை முஸ்தீபுகளும்
அல்லோலகல்லோலமாயின அவள் வீட்டில்

தன்னாலொன்றும் செய்ய இயலாமைக்கு
ஃபேஸ்புக் சாட்டில் வருத்தம் தெரிவித்திருந்தார்
மகன் வீட்டுக்குக் கடல் கடந்து சென்றிருக்கும்
அபார்ட்மென்ட் செகரட்டரி

தொந்தரவு செய்யாதே எனும் பொருளில்
ஆங்கிலத்தில் வைதபடி தொடர்ந்தது
நைட்ஷிஃப்ட் முடிந்துவந்த கணவனின் தூக்கம்

அங்கேயிங்கே ஃபோன் செய்து
அவரை இவரைப் பிடித்து
அலைந்தும் திரிந்தும்
மத்தியான நேரத்தில்
தண்ணீர் வந்துவிட்டது
ஆர்த்தியின் வீட்டில்

வேலைகள் முடித்த ஆசுவாசத்தில்
டிவியை முடுக்கிவிட்டு அமர்ந்தவள்
ஏதோ ஒரு கூட்டம்
ஏதோ ஒரு அணைக்காக
கோஷமிட்டுக் கொண்டிருந்த சேனலை
எரிச்சலுடன் மாற்றிவிட்டு
பிரியமான நெடுந்தொடருக்குத்
தாவிக் கொண்டிருந்தாள்
தண்ணீரை வென்றெடுத்த ஆர்த்தி

5 comments:

 1. குடிநீருக்கு அல்லாடும் தொடரும் பெண்களின் சிரமமும்,அணை இருந்தாலும்,இல்லாமல் ஆனாலும்,எளிய மக்களின் தொடரும் சிரமம் தீர்வின்றி இருக்கிறது என்பதை பளாரென்று சொல்கிறது

  ReplyDelete
 2. தொலை நோக்கு பார்வை இல்லாத ஆள் வோர்,தட்டிக் கேட்க இயலா மக்கள். நிரந்தரம் இன்றி, தற்காலிக தீர்வுகள். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாய் ஆகும் நாள்.எந்நாளோ?.ரொம்பவே சிந்திக்க வைக்கிறிங்க.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நவீனம் + வாழ்வியல் மிக மிக அழகான கவிதை தொகுப்பை எதிர்ப்பார்த்து

  நிறைய அன்புடன்
  வீரமணி

  ReplyDelete
 4. மூன்றாம் உலகப் போரின் காரணியே நீராகத்தான் இருக்க போகிறது

  ReplyDelete