பார்வைகள்

இனிப்புப் பொழுதுகள்

கடந்த ஒரு வாரமாக தரவுகள் சேகரிக்க அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு  வீட்டில்  தாகத்திற்கு தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து விட்டு தரவுகளுக்காக உரையாடிக்கொண்டிருந்த நேரம்... ஒரு  மன வளர்ச்சி குன்றிய குழந்தை (15 வயதாக இருந்தாலும்  அது குழந்தைதான்) வீட்டுக்குள் இருந்து வந்து அருகே அமர்ந்து கொண்டது. அந்த குழந்தையுடனும் உரையாடிவிட்டு அடுத்தடுத்த  தரவுகளுக்காக நகர்ந்து விட்டேன். மறு நாள்  விட்டுப் போன தரவுகளுக்காக   மீண்டும் அதே கிராமத்தின் அதே வீட்டைத் தாண்டிச் சென்ற நேரம்... அதே குழந்தை கையில் நீர் நிறைந்த அதே குவளையுடன் என்னை நோக்கி ஓடி வந்தது. யார் சொன்னது? மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு ஞாபக சக்தி இருப்பதில்லையென்று? நீரைக் குடித்து விட்டு அவளுடன் சிறிது நேரம் உரையாடிகொண்டிருந்துவிட்டு வந்தேன். வாழ்க்கை தேடலின் பொருட்டு மூச்சுத் திணறத் திணற  ஓட வேண்டிய நிர்ப்பந்த பொழுதுகளையும் இத்தகைய மென் நிகழ்வுகள் மிகுந்த இனிப்புக்குள்ளாக்குகின்றன.

No comments:

Post a Comment