பார்வைகள்

Wednesday, September 28, 2022

ஓசியல்ல தனியுரிமை

சமீபத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பேருந்து கிட்டத்தட்ட காலியாக இருந்தது. அடுத்த பெண்கள் கல்லூரியின் நிறுத்தத்தில் சில மாணவிகள் அந்தப் பேருந்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்காமல் சரேலென்று வேகமெடுக்கத் துவங்கியது. 

 நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவிகள் குழப்பம் மேலிட பேருந்தின் பின்னே ஓடிவரவும் பேருந்துக்குள் இருந்த பெண்கள் வண்டியை நிறுத்துமாறு கூச்சலிட்டோம்.  வேறு வழியின்றி ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவே, அந்தப் பெண்கள் அனைவரும் ஓடி வந்து பேருந்தில் ஏறிக்கொண்டனர். பேருந்துக்குள் இருந்த பெண்களெல்லாம் வசைபாடத் துவங்கவே ஓட்டுநர் முகத்தில் அத்தனை கடுகடுப்பு.

தென்காசியில் ஒரு முதிய பெண்மணி முகக் கவசம் அணியவில்லை என்ற காரணத்துக்காக ”இலவசப் பயணத்தில் சேர்த்து வைத்த காசில் ஒரு முகக் கவசம் வாங்க முடியலையா?” என்று மகளிருக்கான இலவசப் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நிகழ்வொன்றை செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். இப்படி இலவசப் பேருந்து பயணத்தில் அவமானப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அலட்சியப் படுத்தப்பட்ட, வசைபாடப்பட்ட பெண்கள் ஏராளமானோர். 

  மற்றொரு நிகழ்வு. எனக்குத் தெரிந்த குடும்பம் அது. பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிந்தைய பொருளாதாரச் சரிவுகள் காரணமாக கணவன் மனைவிக்கிடையே சச்சரவுகள்  வெடித்து, குடித்துவிட்டு வந்து மனைவியை தெருவில் இழுத்துப்போட்டு அடிப்பது வரை பிரச்சனை முற்றுகிறது. குடும்ப வன்முறை தாளாத மனைவி மகளிர் காவல் நிலையத்தை அணுகுகிறார். குடும்பத்துப் பெரியவர்கள் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்துவைக்கின்றனர். இப்போது அந்தப் பெண் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார். பொருளாதாரப் பிரச்சனையை இருவருமாகச் சேர்ந்து ஒருவாறு சமாளிக்கத் துவங்கியுள்ளனர். 

நிலமை சுமூகமான சில வாரங்கள் கழித்து அந்தப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கையில் “உன் வீட்டுக்காரர் தான்  உனக்குப் பணமே கொடுக்கறதில்லையே? அப்புறம் எப்படி ரெண்டு ஊர் தாண்டி மகளிர் காவல் நிலயத்துக்குப் போன?” என்றேன் ஆச்சர்யமாக. 

”அதான் மகளிருக்கான இலவசப் பேருந்து இருக்கேக்கா? அதுலதான் போனேன். அந்த பஸ் மட்டும் இல்லேன்னா ஒண்ணு அவன் என்னைக் கொன்னுருப்பான். இல்லேன்னா நானே தற்கொலை செஞ்சுட்டு இருந்திருப்பேன். என் பிள்ளைக ரெண்டும் அனாதையா நின்னிருக்கும்” என்றாள். நிச்சயமாக அவள் சொன்னது நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். 

 தனது வாழ்வாதாரக் கூடையை தலையில் சுமந்துகொண்டு தினமும் மூன்று கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று அருகில் உள்ள சிறுநகரத்தில் வாழைப்பூ விற்றுவிட்டு மீண்டும் நடந்தே ஊர் திரும்பும் ராசாத்தி அத்தை இப்போதெல்லாம் அரசுப் பேருந்தில் பயணித்து வியாபாரம் முடித்து ஊர் திரும்புகிறார். அன்றாடம் முப்பது ரூபாய் கூடுதலாய்ச் சேமிக்கிறார். மாதம் சற்றேறக்குறைய ரூ.900/-. காய்கறிக் கூடை குறித்துக் கடிந்துகொள்ளும் ஓட்டுநரையோ நடத்துனரையோ அவர் கண்டுகொள்வதேயில்லை.

 மகளிருக்கு இலவசப் பேருந்து நடைமுறைக்கு வந்த காரணத்தினாலேயே மகளை கல்லூரிக்கு அனுப்புகிற கணவரை இழந்த தாய் ஒருவர் அருகில் வசிக்கிறார். இவையெல்லாம் சிற்சில உதாரணங்கள். 

இந்தியாவில் 20.6% பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்பவர்களாகவும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கெடுப்பவர்களாகவும் உள்ளனர். ஒப்பீட்டளவில் பணிக்குச் செல்லும் பெண்களின் விகிதம் தமிழகத்தில் அதிகம் (30%) என்றாலும்  இந்த சதவிகிதம் என்பது பாலின சமத்துவத்திற்குப் போதுமானதாக இல்லை. பணியிடத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது சமூக மற்றும் பொருளாதார இழப்புக்கு வழிவகுக்கும். இதெயெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் பொருட்டு பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதியைச் செய்து கொடுத்திருக்கின்றன டெல்லி யூனியன் பிரதேசமும், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களும். 

 இந்த முன்னெடுப்பை ”ஆண்களைப் போலல்லாமல்  பெண்களிடம் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென்று சொந்தமான  மோட்டார் வாகனப் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பெண்களின் பயணம் என்பது பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தையே சார்ந்துள்ளது. கட்டணமில்லா பொதுப் போக்குவரத்து பெண்களை அதிகாரவயப்படுத்துவதாகவும் கல்வி வேலைவாய்ப்புக்களை அதிகப்படுத்தி அவர்களை சமூகத்தில் பொருளாதார உற்பத்தி திறன்மிக்கவர்களாகவும் மாற்றும்” என்று பாராட்டுகிறார் போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (Institute of Transportation and Development Policy) தெற்காசிய திட்ட தலைவர் ஷ்ரேயா கடெபள்ளி. 
 
  கொரோனா  பெருந்தொற்றுக்குப் பிறகு உலகெங்கும் பெண்கள் மீதான உடல், மனம், உளவியல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியான அடக்குமுறைகளும் சுரண்டல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகமாகியுள்ளதோடு அடிப்படைவாத பாலின பாத்திரப் பிற்போக்குத்தங்களும் வலுப்பெறத் துவங்கியுள்ளன.

 பெண்களின் கல்வி இடைநிற்றல் விகிதம், பாலின ஊதிய இடைவெளி,  இளவயது திருமணங்கள், பாலியல் சுரண்டல்கள் போன்ற பிரச்சனைகள் பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகமாகியுள்ளன (unwomen.org).

 இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் இன்னும் காத்திரமான முன்னகர்வுக்குத் தயாராகவேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே பேருந்து கட்டண விலக்கு என்பது கல்வி, பொருளாதார, அரசியல், உரிமையியல் நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பை எளிதாக்குவதற்கும், ஆண்களின் பொது இடங்களில் பெண்களின் புழக்கத்தை அதிகப்படுத்துவதற்குமான முன்னெடுப்புக்களுள் ஒன்று என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

அது மட்டுமல்ல. பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு தம் குடும்பத்து ஆண்களை மட்டுமே நம்பியிராமலும் அவர்களின் துணையின்றியும் பாதுகாப்பு குறித்த பயமின்றியும் பொதுவெளியில் நடமாடுவதற்கும் பயணிப்பதற்கும் இந்த கட்டண விலக்குடன் கூடிய அரசுப் பேருந்துப் பயணங்கள் கைகொடுக்கின்றன.  

பகிர்ந்தளிக்கப்படுகிற நீதியே சமூக நீதி என்பதை ஒத்துக்கொள்கிறவர்களுக்கு, விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், வாய்ப்பைத் தாமதமாக பெற்றவர்கள் – ஆகியோருக்கான தனியுரிமையையும் (சிறப்புரிமை என்ற சொல் ஏற்புடையதாக இல்லை) சமூக நீதி என்பதை ஏற்றுக்கொள்வதில் என்ன மனச்சிக்கல்? அவ்வகையில் மகளிருக்கான கட்டணவிலக்கு என்பது பல நூறு ஆண்டுகளாக  வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்கள் அதிகாரவயப்படுதலுக்கான தனியுரிமை என்கிற சமூக நீதிக் கண்ணோட்டத்தை  மனித மனப்பான்மைகளில் ஆழப் பதியவைக்க வேண்டியது அவசியம்.  

இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பெண்ணுரிமையிலும் பெண்கல்வியிலும் தமிழகம் பல படிகள் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும் நமது கண்ணோட்டத்திலும் மனப்பான்மையில் பெண்களுக்கான சமூக நீதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

பொத்தாம்பொதுவாக ”இலவசம், சலுகை, ஃப்ரீ பஸ், ஓசி பஸ்” என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பது எத்தகைய ஒரு தட்டையான புரிதலோ, பெண்களுக்கான உரிமைகளும், விலக்குகளும்  எளிதில் புறக்கணிக்கவும் அலட்சியப்படுத்தவும் கூடியவை என்று (மேற்குறிப்பிட்ட ஓட்டுநர்களைப் போல) நம்புவதும்; படித்துவிட்டாலோ, வேலைக்குப் போய்விட்டாலோ தங்களுக்கு எந்த தனியுரிமையும் தேவையில்லை என்று பெண்களே தீர்மானித்துக்கொண்டு பேட்டி கொடுப்பதும், கொடுக்கவைப்பதும் அத்தகைய மேலோட்டமான புரிதல்களே. 

#FreeBus 
#womenempowement 
#socialjustice

No comments:

Post a Comment