பார்வைகள்

Sunday, February 14, 2016

தேவதைக்கு


ரோஜாமொக்குகள் தொடுத்த மாலையணிந்து 
உன்னிடம் வருகிறேன் என் தேவதையே
குழந்தைகளின் கண்கள் என் தலைக்குள் மொய்த்துக் கிடக்கின்றன
அறையப்படும் அணிகளுக்காய் என் உள்ளங்கை விரிந்து கிடக்கிறது
என் கண்களுக்குள் உன் ஒளிக்கதிர்கள் பாய்கின்றன
உன் கதிரொளியில் நிறைவதற்க்காய்
என் யோனியும் கருப்பையும் விரிகின்றன
என் தேவதையே
நான் அதற்கேற்ற பாத்திரம்தான்

நிலையற்றவை – எல்லாமே நிலையற்றவை
மீண்டும் தளர்வத்ற்கே எழும் குறிகள்
உலகமே அசையும் அந்த அமளிக்குப்பின்
மீண்டும் வெறுமைக்கே திரும்பும் பெண்ணின் நிறைவு
அந்தக் கவிஞன் வெறும் குரலாக மட்டுமே இருக்கிறான்
தன் இறப்பின்போதுதான் அவன் குரலைக் கேளாதிருப்பாள்
ஒரேடியாய்க் கிழித்து வீசப்பட்ட பக்கமென
ரத்து செய்யப்பட்டவள் 
இருந்தும் நான் மீண்டும் புத்தகத்தைத் திறக்கிறேன்
நித்தியக் குளிர்தென்றலாய் வீசுகிறாள் அவள்
இழப்பின் கண்ணீர்த்தாரையுடன் ஊதல்காற்றின் வழி
உன்னிடம் வருகிறேன் என் தேவதையே
நம் விதியை மாற்றும் நிலையாமை விரட்ட
சூனியக்காரியின் பச்சிலைகளை என் கழுத்திலணிந்து வருகிறேன்
பதட்ட ரேகைகள் என் முகத்தில் படரும்போதெல்லாம்
பச்சிலைகள் காய்ந்து பொடிகின்றன
எனது மக்ள் ஒரு பற்றுக்கொடியைப் போல
நிலையாமையின் வேலிகளில் தொற்றிப்படர்கிறாள்
என் தேவதையே
எனக்கு இழப்பையும் மரணத்தையும் 
கடந்துபோகும் அனைத்தையும்
போற்றுதற்குக் கற்றுக்கொடு
உன் ஆசிகள் என் மீது பொழியட்டும்

ஆங்கில மூலம்: எரிகா யாங்

No comments:

Post a Comment