பார்வைகள்

Sunday, November 8, 2015

சிவலிங்கத்தின் வரிக்காசு

காளியாத்தா கோவில் திருவிழாவிற்கு
ஊர்சாட்டியிருந்த வாரத்தின் ஒரு
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
வெள்ளைப் பொட்டணமாய் ஊர் வந்து சேர்ந்தான்
கார் மோதிச் செத்துப்போன சிவலிங்கம்

ஆத்தா உத்தரவுப்படி
ஊருக்குள் வர அனுமதியில்லை
முதல் ஆளாக வரிக்காசு கொடுத்திருந்த
சிவலிங்கத்தின் பிணத்திற்கு

தனியாய்ப் போய் பழக்கமில்லாத சனிப்பிணம்
ரோட்டோரத்திலேயே புதையுண்டது
ஒரு நாட்டுக் கோழியின் துணையுடனும்
சொந்த ஊருக்குள் நுழைய முடியாத ஏக்கத்துடனும்

பொங்கலும், கிடாய்க்கறியும்
திங்க முடியாத சோகத்தில்
மாரடிச்சு அழுதது
அங்காளி பங்காளி சனமெல்லாம்

கொலுவிருந்த ஆத்தா
விழா நடந்த மூணு நாளும்
மூக்கை பிடித்துக் கொண்டேயிருந்தாள்
சிவலிங்கத்தின் வரிப்பணத்தில் வாங்கிய
பூமாலைகளிலிருந்து வந்த
பிணவாடை தாளாமல்


No comments:

Post a Comment