பார்வைகள்

Monday, June 23, 2014

அமைதியைத் தேடும் என் கவிஞர் அண்ணாச்சிக்கு....


நான் பார்த்தேயிராத ஒரு வாய்க்கு
இசைக்கருவி என் வாழ்க்கை

எங்கிருந்து வருகிறதென அறியவியலா மூச்சுக்காற்று
அவன் குரலுக்கான ஒரு புழையென
என் மனநிலையை 
இணக்கியும் மாற்றியும் வைக்கிறது
அல்லது அது அவளுடையது
கலைமகள்
வெண்ணிற தேவதை
மாயப்பால் சொரியும் தாயவள்
அர்த்தநாரித் தெய்வம்
அவள் பிடியில்
வதைபடுகிறேன்

அதில்
என் வாழ்க்கையை
என் காதல்களை
நானே வரைவதாய் நம்புகிறேன்
சிலவற்றின் பொருட்டு இன்னும் 
எழுதப்பாடாத 
ஒரு கவிதையென
உண்மையில்
அதை வரைவதென்னவோ
அவள்தான். அவன்தான்.

என் முதுகெலும்பை ஒரு சைலஃபோனாக -
எனது பாலினத்தை ஒரு பண்மணிச் சந்தமாக -
என் உதடுகளை இழுத்துக்கட்டிய பறைத்தோலாக-
இசைக்கிறாள்
உயர்ந்ததொரு தடுப்புச்சுவரில் தொங்கும் கூண்டுக்குள் ஊசலாடி
காற்றில் உருண்டு
கடற்சூறையெனப் புரண்டு
எலும்புகளினூடே விளாசுகிறது காற்று-

என்னை இசைப்பது யாரென்று இனியும்
நான் கவலைப்படுவதற்கில்லை
ஆனால் (இசைப்பதை)
அவள் நிறுத்திவிடக்கூடும் என்கிற விதிர்ப்பில்
என் புறங்கை மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன

உங்களின் ஆர்வத்தைப் போன்றே
எனக்கும் அமைதிக்கான ஒரு ஏக்கமிருக்கிறது
சிக்கல்களற்றதொரு
இனிய இல்லறத்தின் பேருவகைக்காக
கவிதையை மிஞ்சிடும் ஒரு வாழ்க்கைக்காக
அடுக்களையில் விளையாடும் குழந்தைகளுக்காக-
அவை கவிஞர்களின் குழந்தைகளோ,
ஏழைகளின், பைத்தியங்களின், பேய்பிடித்தவர்களின்
குழந்தைகளோ அல்ல-
பூர்ஷ்வாக்களின் கொழுகொழு குழந்தைகள்

என்னைப் போலவே என் மகளுக்கும்
அமைதிக்கான ஒரு கனவு இருக்கிறது
திருமணம்
சொந்த வீடு
அன்பான கணவன்
ஏக்கங்களற்ற நிறைவான புணர்ச்சி
புதிய கள்ளென
பூரணக் கொழுக்கட்டையென
ருசிக்கும் காதல்

ஆனால் உங்களுடையதைப்போலவே
கலைத்தேவதையின் திட்டமும்
வேறாகவே இருக்கிறது
பொம்மலாட்டக்காரி
இருண்ட அரங்கில்
நூலை இழுத்தும் அசைத்தும்
ஊசலாட்டுகிறாள்
கார்ன்வாலை நோக்கி
வெனிசை நோக்கி
டெல்ஃபியை நோக்கி
விரித்த சில படுக்கைகளை நோக்கி
துடிக்கும் ரத்தம் தோய்ந்ததொரு
கம்பத்தில் நிறுத்தப்பட்ட கூடாரத்தை நோக்கி
அவளது பேனாவை,
பென்சிலை
மங்கிய நிலவொளியின்கீழே
நாம் வழிபடும் அந்த ஒற்றைக்கல் சிலையைநோக்கி



****ஆங்கில மூலம்: எரிகா யாங்****

No comments:

Post a Comment