பார்வைகள்

Thursday, February 28, 2013

யட்சனின் முகவரி


உள்ளீடற்ற இந்த வெளியின்
திசையறியாதவொரு மூலையிலிருந்து
ஒலிக்கத் துவங்கும் பாடல் யட்சனுடையதென்று
தேவதைகள் அறிவித்துப்போன நாளிலிருந்து
வாசலில் உதிர்ந்துவிழத் துவங்குகின்றன 
அவன் முகவரியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும்

உயிரும் மெய்யுமாய் வாசலெங்கும் 
துடித்துக்கொண்டிருக்கிற உயிர்மெய்களைக்
கடந்து போகிறேன்
நாளுக்கொன்றாய் ரகசியமாய் வாசித்து

சிதறிக்குவியும்-பின் 
அணிசேர்ந்து சரம்பிரியும் 
சொற்கோவையின் வித்தைக்கு  
பதறித் திறக்கின்றன
அறைந்து சாத்திய அகத்தின் பாவனைகள்

பகிரப்படாத முத்தங்களாலும்
நிகழ்த்திக்கொள்ளாத தீண்டல்களாலும்
நிரம்பிய என் வீட்டின் 
எல்லாத் துவாரங்களிலும் நுழைந்து 
பரிகசிக்கிற மாயப்பதங்களுக்கு 
உருப்பெருக்கிக்கொண்ட அதிவசீகரம் 

ஈர்ப்பின் வலி பெருகிய வாதைப் பொழுதொன்றில்
கொம்புக்கலையும் பற்றுக்கொடியின் 
சுருண்ட நுனியென நடுங்கும் விரல்களால் 
கோர்க்கத் துவங்குகிறேன்
கலைந்து கிடக்கும் முகவரியை

ஏழிலம்பாலை* அரும்பவிழ்க்கும் பருவத்தில்
மெல்லப் புதிரவிழ்க்கிறது முகவரி
தன்னை மிக நேர்த்தியாய்
வடிவமைத்துக்கொள்ளத் துவங்குகிறது
ஒரு களவு

முலாம் கிழித்து மெல்ல வெளியேறுகிறாள் 
அடங்காப் பெரும்பசியில் ஆழ்துயில் முறித்த 
விரிகூந்தல்  யட்சி

No comments:

Post a Comment