பார்வைகள்

Friday, December 16, 2011

துணை


அறையெங்கும் இரைந்து கிடக்கிறது தனிமை
கொடிக்கயிற்றில்,
மிச்சம் வைத்த தேநீர்க் கோப்பைகளில்,
கழற்றி எறிந்த காலணிகளில்,
ரசம் போன கண்ணாடியில்,
ஒட்டடையில், இண்டு இடுக்குகளில்-என
எங்கும் வியாபித்து நிறைந்திருக்கிறது.

தனிமையைத் துணைக்கழைக்க
பிரயத்தனங்கள் எதுவும் தேவையாய் இருந்ததில்லை எப்போதும்-
இலக்கின்றி வெறித்துருளும் கண்களின் வழியே
எளிதாக உள்நுழைந்து விடுகிறது
வாலாட்டியபடி-

வலுக்கட்டாயப் புறக்கணிப்பின்போதெல்லாம்
முணுமுணுத்துக் கொண்டே விலகுகிறது
காசு கேட்டு ஏமாந்த ஒரு
பிச்சைக்காரனைப் போல

தனிமையின்றிக் கடந்ததேயில்லை எந்த நாளும்,

இப்போதெல்லாம்
சாம்பல் நிறத்து மாலைவேளைகளில்
அடர்ந்த மரங்களின் அணிவகுப்பினூடே
யாருமற்று நீண்டுகிடக்கும் தார்ச்சாலைகளில்
கைகோர்த்து நடந்து கொண்டிருக்கிறோம்
நானும்
என் தனிமையும்-

3 comments:

  1. தனிமைக்கு துணை போய்ட்டிங்க.இனி தனிமையின் பாடு திண்டாட்டம் தான்.

    ReplyDelete