பார்வைகள்

Saturday, December 17, 2011

தவி(ர்)த்தலன்றி வேறொன்றுமில்லை

மீண்டும் ஒரு இனிய கனவை வீணடித்துவிட்டு
மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது...
தடித்து நீண்ட வினாடிகளாலான - இந்த இரவு-
ஒரு சர்வாதிகாரியின் விறைப்போடு - அருகமர்ந்து
என்னையே முறைத்துக் கொண்டிருக்கிறது...
என் முகவரிக்கு நீ அனுப்பிவைத்திருக்கும் மௌனம்-
எனக்கான பிரத்யேகங்கள் ஏதுமற்ற - உன்
அன்றாடங்களை முடித்துக் கொண்டு
இன்றும்-நீ
உறங்கிப் போயிருக்கக் கூடும்....
ஒட்ட இயலாமல் உருண்டு கொண்டிருக்கும்
நீர்க்கோளத்தின்
தவிப்பையறியா தாமரை இலையைப்போல-
விழித்திருத்தலுக்கும் உறக்கத்திற்குமான இந்த
இடைவெளிகளின்
பரிமாணங்கள் முழுவதும்
எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது...
உனக்கும் எனக்குமிடையே
எதுவுமே இல்லாத
ஏதோ ஒன்று-

No comments:

Post a Comment