பார்வைகள்

Friday, December 16, 2011

கண்ணாடி கோலிகளும் அத்தை மகனும்பள்ளிப் பருவத்தின் ஒரு வெயில் மாதத்தில்தான்
முதன்முதலாய்ப் பார்த்தது அத்தைமகனை-

காற்று வாங்கிக் கொண்டிருந்த-அவன்
கால்ச் சட்டையைப் பார்த்து
வாய்பொத்திச் சிரித்ததில்தான்
அடித்துப்பிடித்து ஆரம்பித்தது
இருவருக்குமிடையேயான உறவும், பகையும்-

மரச்சொப்புகளும், சொட்டாங்கற்களும் நிறைந்த
என் சின்னஞ்சிறு உலகத்திற்குள்
கண்ணாடி கோலிகளை உருட்டிவிட்டு வசீகரித்தவன் அவன்தான்-

கோலிக் குண்டுகளுக்கான என் கெஞ்சலும் கேவலும்
கரைக்கவே இல்லை அவன் கல்மனதை-

ஏமாற்றத்துடனேயே ஊர்திரும்ப வேண்டியிருந்தது
ஒவ்வொரு விடுமுறையின் முடிவிலும்-

வாழ்க்கைத் தேடலின் வற்புறுத்தலின் நிமித்தம்
எதிரெதிரே நீண்டிருந்த இருவேறு பாதைகளில்
ஓடிக் களைத்து ஊர்திரும்புகையில்
எனக்கே எனக்கென்று பத்திரமாய் வைத்திருந்தான்
கண்ணாடி கோலிகளில் ஒன்றிரண்டையும்-

ஊதுபத்திப் புகையினூடே தெரியும்
மாலை போட்ட மரச்சட்டத்தினுள் உறைந்துவிட்ட
மெல்லிய புன்னகையையும்-

3 comments:

  1. கடைசி வரியின் சுமை கண்ணீராக கொட்டுகிறது,இந்த ஞாபகக் கேவல் எல்லார் மடியிலும் கொட்ட முடியாத
    ஒரு சுமையாக தொடர்ந்துக்கொண்டே இருக்கும்?

    ReplyDelete
  2. உறைந்துவிட்ட மெல்லிய புன்னகை.

    ReplyDelete