பார்வைகள்

Friday, March 30, 2012

கூடுதலும் கூடுதல் நிமித்தமும்

கொதித்ததும்
குளிர்ந்ததும்
சிலிர்த்ததும்
தகித்ததுமான
நெடும்பயணத்திலிருந்து பாய்ந்தோடி வரும்
மதநீர்ப் பெருக்கிய என்
உன்மத்தங்களின் வாடிவாசல்
விரிய திறந்திருக்கும் உன் கோட்டைக் கதவாயிருந்திருக்கக்கூடும்

திமில் சிலிர்த்து முன்னேறுகையில்
அங்குலங்களில் கரையும் இடைவெளிகளை எதிர்கொள்ள
ஒரு பேரிடர் மேலாண்மையை
துணைக்க்ழைத்து வந்திருப்பேன் கையோடு

முன்னெற்றி முகிழ்த்தலில் துவங்கித் தொடரும் ஒரு
கலாபத்தின் அதீதங்களில் பரிதவித்து மீளும் நேரம்
உருகி வழிந்துகொண்டிருக்கும்
நாட்பட்ட அடர்பசலையின் நிறப்பிரிகையில்
எனக்கான வண்ணங்களைத் தேடிக்கொண்டிருந்திருப்பேன் பட்டாம்பூச்சியாவதற்கு

விடுபடுதலின் விழைதலற்ற
முன்பனிக் காலத்துப் பின்னிரவில்
ஓய்ந்த மழையின் கடைசிச் சாரலாய்
அங்கங்கே விழுந்துகொண்டிருக்கும் உன்
சினேகத்தின் சிதறல்களைச் சேகரித்திருந்திருப்பேன்
சிறுபிள்ளையென

சாத்தியங்கள் இத்தகையனவாயிருந்தும்
அவசர முயக்கத்தின் களைப்பில்
ஆழ்ந்துறங்கும் உன் வெற்று முதுகை
வெறுமனே வெறித்துக்கொண்டேயிருக்கத்தான் வாய்க்கிறது
ஒவ்வொரு இரவிலும்

7 comments:

  1. அருமை!பாராட்டுக்கள்---ஆர்.எஸ்.மணி.திண்டுக்கல்

    ReplyDelete
  2. ஒரு ஆண், பெண்ணைப் பார்த்துப் பாடுகிறானா ?

    ReplyDelete
  3. irandam murai padikkumbodhum pudhidhagave therigiradhu(mudhal murai 361l)

    ReplyDelete
  4. "விடுபடுதலின் விழைதலற்ற
    முன்பனிக் காலத்துப் பின்னிரவில்
    ஓய்ந்த மழையின் கடைசிச் சாரலாய்
    அங்கங்கே விழுந்துகொண்டிருக்கும் உன்
    சினேகத்தின் சிதறல்களைச் சேகரித்திருந்திருப்பேன்
    சிறுபிள்ளையென.."
    அருமையான கவிதை .ஆழ்ந்த பொருள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete