பார்வைகள்

Wednesday, December 21, 2011

ரௌத்ரம் பழகு


ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆதியில் உதித்த மூதாய்க்கு
பரிணாமத்திலேயே முளைத்திருந்தன
ரௌத்ரம் பாரித்த கோரைப்பற்கள்

யுகங்கள் பலகடந்தும்
இன்று வரை-
மரபணுக்களின் இழை வழியே
தவறாமல் கடத்தப் பட்டிருக்கின்றன
கூர்மைக்கான சேதிகள்

காலவெள்ளத்தின் காட்டாற்றங்கரையோரம்
ஒதுங்கிக் கிடக்கின்றன
புராதனக் குறடுகள் பிடுங்கிப் போட்ட
பல பற்கள்

கூர் தொலைத்துக் கிடக்கின்றன
பழஞ்சம்மட்டிகள் மழுங்கடித்த
பற்பல பற்கள்

தன்மை மறந்து
துருப் பிடித்துப் போயின
தப்பித்த பற்களெல்லாம்

குறடுகளும் சம்மட்டிகளும்
ஓய்ந்து சரிந்தன
சில பற்களுக்குத் தோற்று

கோரைப் பற்களுக்கான வரலாறு
இவ்வாறெல்லாம் பதிவு செய்யப் பட்டிருக்கையில்

சிவந்த என் ஈறுகளினடியில்
பசித்த புலியாய்ப் பதுங்கிக் கிடக்கும்
கூரிய பற்களுக்கு
வரலாற்றில் எந்த இடம்?

No comments:

Post a Comment