பார்வைகள்

Thursday, May 30, 2013

மிஸ்டர். சுப்ரமணிமிஸ்டர். சுப்ரமணி
உன் கண்ணை நோண்டி காக்காய்க்குப் போட
உன் மூக்கைத் திருகி மூலையில வீச
உன் தலைமயிர் ஒவ்வொன்றாய்ப் பிடுங்கி எறிய
உன் வாயைக் கிழித்து கேப்பையை நட்டுவைக்க

நீயும் உன் முகறையும்
கேடுகெட்ட சுப்ரமணி
வீணாப்போன சுப்ரமணி
சுப்ரமணியாம் சுப்ரமணி
விளக்குமாத்துக் கட்டைக்குப் பேரு பட்டுக்குஞ்சமாம்

போதுமைய்யா சுப்ரமணி போதும்
பொங்கச் சோறும் வேணாம்
பூசாரித்தனமும் வேணாம்

இந்த ச்சுப்ரமணியை மறக்கவே…
அடச்சீ
நினைக்கவே கூடாது

தீர்க்கமாய் முடிவெடுத்த நாளொன்றில்
அதிகாலையில் வரவில்லை பால்க்கார சுப்ரமணி
சுப்ரமணி கடையில் கத்தரிக்காய் விலை அதிகம்
சிவசுப்ரமணியம் மாமா வீட்டுக்கு வந்தார்
சுப்ரமணி டீக்கடை வடையில் நீண்ட மயிர்
சுப்ரமணி மஹாலில் பாலசுப்ரமணிக்கு கல்யாணம்
சுப்ரமணி & கோ பூச்சிமருந்து கடையின் வெள்ளிவிழாவாம்
சுப்ரமணியம் மெடிக்கல்ஸ் பூட்டிக்கிடந்தது
மேலமந்தை சுப்ரமணிக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
சுப்ரமணியன் ஸ்வாமி யுஎஸ் போனார்
சுப்ரமணியோடு ஸ்ரீதேவிக்கும் கமலுக்கும் கூட பூங்காற்று புதிரானது

அய்யோ… மிஸ்டர். சுப்ரமணி
தொலஞ்சு
காக்காய்க்குப் போட்ட கண்களைத் திரும்ப எடுத்துக்கோ
மூலையில் கிடக்கும் மூக்கை எடுத்து மாட்டிக்கோ
உதிர்ந்த தலைமயிரின் வாசனைக்கு
மல்லிச்செண்டு வாங்கிக்கோ
கிழிந்த வாயைத் தைக்க தோதான
சூனியக்காரி வீட்டுக்கு வழிதெரிய வேண்டிக்கோ

அட கேடுகெட்ட சுப்ரமணி
வீணாப்போன சுப்ரமணி
சுப்ரமணியாம் சுப்ரமணி
பட்டுக்குஞ்சம் இல்லாமலேயே எம்புட்டு
அழகாக இருக்குது விளக்குமாறு

உன்னைமறக்க நினைத்த ஒரே நாளில்
ஊரெல்லாம் நீயென ஆகிப்போனபின்
உனைமறந்து திரியும்
உன்னைப்பற்றிய என் நினைவைத்தான்
துண்டுகளாக்கி
மிளகாய் தடவி வதக்கிக்
காக்காய்க்கு போடவேண்டும் என்று
தோன்றாமல் போன என்னை….

”ச்ச்ச்ச்சுப்ப்பிர்ர்ர்ரமண்ண்ண்ண்ணி!!!!!!!!!!!!!!!”

நல்லது மிஸ்டர் சுப்ரமணி
நாசமாய்ப் போ.

No comments:

Post a Comment